Sunday, October 30, 2011

நெடுஞ்சாலை அழகு..

பாலேடு சுருக்கங்களாய்
மடிந்து மடிந்து – குளத்து
நீரின் சிறு அலைகள்.

நீரேட்டின் மத்தியை பிடித்திழுத்து
மேலே தூக்கி விசிற விரிந்தது
போலொரு நீல வானம்- அதில்
புரண்டோடும் மேக கூட்டம்.

இக்கொள்ளை அழகுக்கு இடையே
கொணரிப் பட்டையில் அடுக்கபட்ட
சந்தை பொருட்களாக நகர்கிறோம்
அலுவலகம் நோக்கி நெடுஞ்சாலையில்


நன்றி : திண்ணை
http://puthu.thinnai.com/?p=5409

சொல்ல விரும்பாத கதை

பிரவாகமாக ஓடி கொண்டிருக்கையில்
அருவியாய் பாறைகளில் புகுந்து
வந்த வலிகளை சொல்ல வேண்டியதில்லை
யாருக்கோ ஊக்கமளிக்கும் என்றாலொழிய..

கடலுக்குள் கலந்த அமைதியில்
பிரவாகமாக ஓடிய பிரபாவத்தை
சொல்லுகிற தேவையும் இருக்காது.

அதிகபட்ச வலி மிகுந்த கதையொன்றை
சொல்லியே ஆக வேண்டுமெனின்
ஊற்றாய் புறப்பட வேண்டியதை
மலை உச்சியிலிருந்து தள்ளி ஓடவிட்ட
துரோகத்தை வேண்டுமானால் சொல்லலாம்.


நன்றி : கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17111:2011-10-23-20-14-26&catid=2:poems&Itemid=265

Sunday, October 23, 2011

சுடர் மறந்த அகல்

மாரியாத்தா….

சந்திகால வேளையில், ஓடி சென்று
நெய்வேத்யத்தை கொரித்துக் கொண்டே
சிவனிடம் அன்று நடந்தவைகளை
பகிர தோன்றியது இல்லையோ ?

மகிசாசுரன்களை வதம் செய்கையில், அசதியாக சாய
சிவன் தோளை காணாது துவண்டது இல்லையோ ?
பக்தர்கள் வரம் நிறைவேறி ஆனந்திக்கையில்
நெகிழந்து ,அழுத்தி பிடிக்க சிவன் கரம் தேடாதோ?

ஆர்த்தியின் பின்னொளியில் கண்டோம்,
உன்னை அம்மை தடுப்பவளாய் மட்டும்
தனித்து இயங்கும் திடமான உன் ஆளுமையை
பிரசாதமாக ,ஒரு துளியை சுவைத்திருந்தாலும்
இந்த கதி வந்திருக்குமா ,எங்களுக்கு?

ஆதியிலிருந்து பார்த்து கொண்டிருப்பவளே!
எப்போது வீழ்ந்தோம்? எதனால் வீழ்ந்தோம்?
சொல்லடி சிவசக்தி, சுடர்மிகும் அறிவுடன் மாற்றிவிடு .

நன்றி : திண்ணை
http://puthu.thinnai.com/?p=5255

Wednesday, October 19, 2011

கையாளுமை

காட்சி ஒன்று ..
மறுத்து பேசும் பிள்ளைகளிடம்
மன்றாடி மனு போட்டு,
மாறுவேடம் தரித்து பயமுறுத்தி,
கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டு

காட்சி இரண்டு ..
உம்மென்றால் உம்மனாமூஞ்சிகளாகி,
ஏனென்றால் எரிமலையாய் எழும்
வயதான வீட்டு பெரியவர்கள்
மனம் கோணாமலிருக்க கோணாங்கியாகி ..

காட்சி மூன்று ..நான்கிலும்
ஏதோவொரு உத்தியை கையாண்டதில்
மான,ரோஷம்,வெட்கம்
சூடு, சொரனை யாவும்
இப்போது அஞ்சறை பெட்டியில்..
தாளிதத்திற்கு மட்டும்

நன்றி : திண்ணை
http://puthu.thinnai.com/?p=4919

முடிவுகளின் முன்பான நொடிகளில்...

வெற்றியின் நொடிகளை கொண்டாடலாம்
தோல்வியின் நொடிகளை தேற்றலாம்
முடிவுகள் அறிவிக்கும் முன்புள்ள,
மனதை கவ்வி முறுக்கும் நொடிகளை
என்ன செய்வது?


ஜெயிக்க வைக்க சொல்லி ஜபிப்பதா?
ஆசீர்வதிப்பாரோ , மாட்டாரோ என்ற
நிழல் தடுக்கி இடறுகையில் - கண்களை
இடுக்கி வேகம் கூட்டி ஜபித்தாலும்
மனக்கரைசல் திப்பிகளாய் தங்குவது நிற்பதில்லை


சரித்திர நாயகர்களின் சாதனைகளின்
நினைவுகளை துணைக்கு அழைத்தாலும்
இறுகி விடுகிற நொடிகளில் ,உள்இறங்காமல்
ஒழுகி ஓடி நழுவுகிறது நம்பிக்கைகள்..


மண்டை ஓட்டை அடைகாத்து என்னவாக போகிறது
சரிந்து இழுக்கும் இப்புதைக்குழி நொடிகளை
வலிக்க காத்திருப்பதினால் என்னவாக போகிறது
செய்ய வேண்டியவைகளை செய்வதை விட்டுவிட்டு ...

நன்றி : திண்ணை
http://puthu.thinnai.com/?p=5085

காதலின் கரைகளில்..

காதலன் ஒருகரையில்
காதலி மறுகரையில்
நதியில் கால் நனைக்காமல் ..


பேச்சால் கயிறு திரித்து
வீசுகிறான் காதலன்
இக்கரைக்கு இழுத்து
நதியின் பிரவாகத்தை போன்ற
தன் காதலில் ஜெயிக்க ...


காதலி வீசிய கயிறு
மூக்கணாங்கயிறாகி -
இளுவையாய் இழுத்தபடி அவள் -
நதியின் ஆழத்தை போன்ற
தன் காதலை நிரூபிக்க


இழுபறிகளின் நடுவே
சம்மந்தமே இல்லாமல்
காதல் மட்டும் , ஜீவநதியாக
களங்கமற்று எப்போதும் போல்..

நன்றி : பதிவுகள்
http://pathivugal.com/
அக்டோபர் கவிதைகள் - 1

Saturday, October 1, 2011

கடவுளிடம் டிஷ்யூம்-டிஷ்யூம்

”முன் ஜென்ம” கணக்கு காட்டி
எனக்கு மறுக்கபட்டிருந்த அன்பை
நான் மற்றவர்க்கு கொடுத்து விட்டால்,
தண்டனையென எனக்கு விதித்ததை
எப்படி வசூளித்து கொள்வாய்?


உன் செயல்களை அறிய முயன்று
நான் தோற்கிற வரை
நீ பரம்பொருள் தான்..
நிகழ்வுகளின் மூல கூறுகளை
அறிய முற்படுவதையே விட்டுவிட்டால்
உனக்கு என்ன பெயர் வைத்துகொள்வாய்?


எதிர்காலத்தை கையில் கொண்டு
வித்தை காட்டி மகிழ்கிறாய்
எதுவாயினும் இருக்கட்டும் என
நான் விட்டு விட்டால்
உப்புசப்பற்று ஆகிவிடுமோ உனக்கு ?


இப்படி ,நீ தடுக்கில் புகுந்தால்
நான் கோலத்தில் புகுகின்ற போது
சரியான போட்டியென சொல்வாயா? - இல்லை
எனக்கு ஞானம் வந்துவிட்டது
என சொல்லி விடுவாயா ?

http://puthu.thinnai.com/?p=4450
நன்றி : திண்ணை