Sunday, January 28, 2018

பாதை

பாதை என
தனியாக ஒன்று
எங்குமில்லை..


என் ஒவ்வொரு காலடிக்கும்
முன்பு கைப்பிடி கருங்கற்களை
நானே நிரப்பியப்படி செல்கிறேன்


இதற்கு
வெறும் தரையிலேயே
நடந்து விடலாம் தான் ..


நடக்கின்ற தைரியம் முளைப்பதே
பாதையென கொள்வதில் என்பதனால்
கற்களை பாதையாக்கிய பயணம்


தடம் பதித்து தெரிவிக்கவோ
கம்பள வரவேப்பு ஏற்கவோ அல்ல.
பாதை போட்டு திரிந்தாலாவது
அடைகிற இடம் புலப்படலாம்..


அருகிலிருப்பவரின் பாதைகள்
அக்கரைகளாக அச்சுறுத்துவதில்
இடைவெளி வெறுந்தரைகள்
ஆறாக அரற்றுகிறது


நான் வீசிய ஒவ்வொரு
அங்குல பாதைகள் மட்டுமே
கதை பேசி அழைத்து செல்கிறது
நடு ஆற்றில் விழுந்து விடமாட்டாயென
கைப் பிடித்து..


நீங்கள் கிளம்பலாம்

ஆரிகாமி உருவம் ஒன்றுக்கு
காகிதத்தை பகுதியாக மடிப்பதும்
நீண்ட பகுதியை குறுக்குவதும்
கலைத்து பின் சரி செய்வதுமாய்..


மனதையும் மடித்து மடித்து
சீர்பண்பு ஒன்றுக்கு பழகுகிறேன்


திண்மை உருப் பெற
முன்மடிப்பில் எளிமையை மடக்குகிறேன்
வன்மை துருத்தியப்படி பின்மடிப்பில்


சுய அங்கீகாரம் உருவேற்ற
முடியுமென்ற பகுதியின் பக்கவாட்டில்
முடியாது பகுதியை  நீட்டுகிறேன்


அதுவரை என்னுடனிருந்த நீங்கள்
அரங்கத்தில் இருந்து இறங்கி
பார்வையாளர் இருக்கையில்
நேர் எதிரில்.


ஒவ்வொரு மடிப்பையும்
தனித்தனியாக அவதானிக்கிறீர்கள்
பின்மடிப்பில் வன்மம் தெரிகிறது
பக்கவாட்டில் அகம்பாவம் தெரிகிறது
தொடர்ந்து கூச்சலிடுகிறீர்கள்
மன்னிப்பு கோருகிறீர்கள்


உருவம் ஏற்றவே மடிப்புகள் என்றோ
துருத்திய பகுதியை மடிப்பேன் என்றோ
முழு உருவத்திற்கும் காத்திருக்கும் அன்பையோ
அறிந்திராத, அறிய முயலாத உங்களை


பார்வையாளராக கூட
இருக்க வைத்து துன்புறுத்த
விரும்பவில்லை ஆகையால்…


நீங்கள் கிளம்பலாம்
நன்றி!

http://www.keetru.com