Saturday, February 5, 2022

வந்தேறி


கீரைக்காரம்மா
மளிகைக்காரத் தாத்தா
ஆட்டோக்கார அண்ணா
உரையாடிய மொழி..
 
 
போக்குவரத்து நெரிசலில்
வசைப் பாடிய சொந்தங்களின்
அடுக்கு மொழி உட்பட..
 
 
எண்ணங்களின் சுருதியில்
இணைந்து விட்ட மொழி.
உணர்வுகளை மீட்டும் போது
நாட்குறிப்பிலும் கடிதத்திலும்
இயல்பாய் கசிந்த மொழி.
 
 
தாய் வழி மொழியல்ல
தாயையும் பாட்டியையும்
சுற்றிச் சுற்றி வாழ்ந்த சகமனித
சங்கிலித் தொடர் மொழி.
 
 
கயிறு திரித்த மடமையின்
ஒற்றைச் சொல் – வந்தேறி
உயிரோட்டமான பிணைப்புகளின்
நகக்கண்களில் கூர்முட்களை
ஏற்றியப்படி..
Thursday, December 6, 2018

பனிக்காலம்டிசம்பர்  மாதத்து 
வீட்டு  முற்றங்கள் 
கனக்கத்  துவங்கின
மாலை  நான்கிற்கே 
கவிகிற   காரிருள் 
எடை  தாங்காமல் 

                  இலைகள்  உருவி  விடப்பட்ட
                  மரங்கள்  நிர்வாணமாய்  தெருவோரத்தில்
                சின்னஞ்சிறு  மின்விளக்கை  போர்த்திய
                  கிறித்துவ  மரமும்  மான்  பொம்மைகளும்
                  கதகதப்பில்  அங்கொன்று  இங்கொன்றுமாய்

இருளில்  முக்கப்பட்ட  யாவும்
குபுகுபுவென்று  குமிழ்  விடுகிறது 
பதற்றத்துடன்  இனமறியா  அச்சத்தை …
கைக்  கொடுத்து இழுத்து விட 
வந்து  விடு  வசந்தமே விரைவாக


Dec 6,2018

Tuesday, November 6, 2018

நானும் தான்

மெலிதாய் சொல்ல
வலிந்துச் சொல்ல
சொல்லாமலே விட்டுவிட
முயன்று முயன்று...

மெல்ல முடியாமல்
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
வரைச் சட்டத்தை உடைத்து
கொட்டி விட்டாள் ஒருத்தி..

மீ-டு மீ-டு
நானும் தான்... நானும் தான்
கரும்புகையாக ஒலிகள்
தொடர் அலையாக

அக்கரும்புகை இருட்டில்
வரைச் சட்டம் இல்லாத
எதிர்மறை புகைப்படமென
தொங்க விடுவார்கள் சாரிசாரியாக..

மற்றொரு கழுவலுக்குப் பின்
மீண்டு வருவாய் வெளிச்சத்திற்கு
கைப்பட்டு அழியாதிருக்க
காலத்தால் மாறாதிருக்க
வரைச்சட்டமொன்று வடிவம் ஏற்கும்

அவ்வரைச்சட்டக் கண்ணாடியின்
பின்னுள்ள பிம்பம் உனதானது
முகம் பார்க்கும் கண்ணாடி அல்ல
உன் பிம்பம் பிரதிபிம்பமாக

புது அடையாளம் தேடலில்
உடல் மொழி மாற்று
உள்ள மொழி மாற்று
உன்னையே மாற்று
என நெருக்குகிற வேளைகளில்..

பிரகடனப் படுத்து-
நளினம்
மென்மை
மாண்பு
அன்பு...
இது எமது பிறப்புரிமை!


https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/36044-2018-11-04-12-43-34?fbclid=IwAR3PQ7e_W-gahGUT6mc487AI6JhlV8_wljdmz3-1jU0ragDYcDZ6u52hmyQ

Wednesday, October 17, 2018

சிறுகதை : சீனியர் ரிசோர்ஸ்

குளிர் அறையிலும் லேசாக வியர்ப்பது போல் இருந்தது சபேசனுக்கு. அவ்வறையில் அம்மூவரை தவிர வேறு யாரும் இல்லை.


“என்னங்க இப்படி பண்ணீட்டீங்க! ..நீங்க    சீனியர் ரிசோர்ஸ் ன்னு தானே ஆன்சைட்டுக்கு அனுப்பி வைச்சோம்!” என்று   ஆரம்பித்தார் வட்ட மேசை சுற்றி உட்கார்ந்திருந்த இரண்டு அதிகாரிகளில் ஒருவர்.


சபேசன் இதற்கு இரண்டு வரிகளில் பதில் சொல்ல இயலாது.. ஆன்சைட்டில் நடந்த விவரத்தை சொல்லி புரிய வைக்க வேண்டுமென யத்தனித்து  “அங்கே என்ன நடந்துச்சுன்னா..” என ஆரம்பிக்கும் போதே   முழு கதையும் கேட்கிற ஆர்வமில்லாதவர் போல் தலை அசைத்தார் மூத்த அதிகாரி.அப்போதே தளர்ந்துவிட்ட தன் குரலை ஒருவாறு சரிச் செய்யதபடி, சபேசன் தன்னை ஒருங்கிணைத்து “பேட்ச் ஜாப்க்கான எல்லா விவரங்களையும் இ-மையிலிலும் போனிலும் தெரியப்படுத்தி விட்டு , தொடர்ந்து மானிடர் செய்ய வேண்டும் ,இந்த் ஜாப் மிக முக்கியமானது என்று சொல்லிவிட்டு தான் தூங்கப் போனேன்.


கடைசியில் ஆப்ஷோரிலே   இவங்க லாக் பையிலை பார்ககாமல்   ஜாப்  நின்று போனது தெரியாமல் ,ஜாப் முடிய வேண்டிய  நேரத்திற்கும் முப்பது நிமிடம் கழித்து என்னை வோர்க் போனில் தொரட்ந்து கால் செய்துவிட்டு அமெரிக்காவில் அப்போது இரவு நேரம் என்று அப்பறமா தோணி  மொபையிலில் அழைக்கிறார்கள் .இதிலேயே முக்கால் மணி நேரம் போயிடுச்சி ,நான் வந்து கனக்ட் செய்து சரி செய்ய பத்து நிமிஷம் ஆயிடுச்சு .அவ்வளவு தான், கலைண்ட் எஸ்கலேட் பண்ணிட்டான் !”


“அவங்களையும் விசாரிப்போம். அதெல்லாம் சரி.. ஆனா ஆப்ஷோரிலே புது ரிசோர்ஸ் ,அதுவும் சின்ன பசங்க.. நீங்க தான் இன்னமும் கவனமாக பார்த்து இருந்திருக்கனும். இந்த எஸ்கலேசனால பெரிய இம்பேக்ட்,சபேசன் ” என்ற மூத்த அதிகாரி, இளம் அதிகாரியை பார்த்து “சரி அடுத்தது என்ன ? ஆர்.சி.ஏ கேட்பாங்க..ரெடி பண்ணுங்க.. ” எனச் சொல்லி எழுந்தார்.


ஏதோ சொல்ல வந்த சபேசனை இடைமறித்து ,அது வரை அமைதியாய் இருந்த இளம் அதிகாரி , “ சரி இனிமேல் இப்படி நடந்துக்காம பார்த்துக்குங்க..” என்றார்.  அமைதியாய் இருந்ததனால் இவர் நம்மை புரிந்துக் கொண்டிருப்பார் என நினைத்திருந்த சபேசன் ,இதைக் கேட்டதும் இனி பேச ஒன்றும் இல்லை என்று எண்ணி அவரும் எழுந்து சீட்டில் வந்து அமர்ந்தார்.


சீட்டில் வந்து அமர்ந்தும் சபேசனின் மனசு ஏதோ கணத்தது .மதியம் மூன்று தான் ஆகிறது. வீட்டுக்கு போய் விடலாமாயென யோசித்தார். வெளியே வந்ததும் கிளம்பினால்  தனக்கு சகிப்புதன்மையில்லை ஆட்டிடுயூட் பிரப்ளம் என சொல்லி விடுவார்கள் என நினைத்து காபி அருந்தலாம் என காபி அறைக்கு வந்தார்.


அங்கே அபிநந்தனைக் கண்டதும் ”ஹலோ” என்று கைக் குலுக்கிக் கொண்டனர்.
“என்னங்க.. யூ.ஸ்க்கு லாங் டேர்ம் போயிருக்கிறதாச் சொன்னாங்க..அதுக்குள்ளே இரண்டு மாசத்திலே வந்துட்டீங்க..  வந்துட்டீங்களா.. அனுப்பிச்சிடாங்களா ? என  அருகே  சாய்ந்தபடிக் சிரித்துக் கொண்டேக் கேட்டார். சிரிப்பில் எந்த குத்தலும் இல்லை. உண்மையான வேடிக்கை மட்டும் இருந்தது.

“நானா எங்கேயும் கேட்கிறது இல்லைங்க. அவங்களா அனுப்பி வைச்சா போயிடறது.  இங்கேயிருந்து அங்கே போனாலும் சரி, அங்கேயிருந்து இங்கேனாலும் சரி” என்றார் சிரித்திக் கொண்டே சபேசன்.

இருவரும் சிறிது நேரம் வேறு சில விசயங்களை பற்றி பேசி சிரித்ததில் மனம் லேசானது சபேசனுக்கு.

இந்தியா திரும்பியதிலிருந்து இன்னமும் பிராஜக்ட் கிடைக்காததால் ,பெஞ்ச் எனச் சொல்லபடுகிற வர்க்கத்துக்கு தள்ளப்பட்டார் சபேசன்.  முதல் ஒரு மாதம் வரை பிராஜக்ட் இல்லாவிட்டாலும் முழு சம்பளம் கிடைக்கும். இரண்டாவது மாதமும் கிடைக்கா விட்டால் ,அரை சம்பளம் தான், பெஞ்ச் வர்க்கத்தினருக்கு.

ஆகையால் வேலை என்று பெரிதாக ஒன்றும் இல்லை இன்று. ஐந்தரை ஆனதும் வீட்டுக்குப் புறப்பட்டார். வீட்டில் குழந்தைகள் டீச்சர் விளையாட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.  பெஞ்ச் மேல் நிற்கிற தன்னை பார்த்து, இவர்களின் எதிர்காலத்திற்கு பதில் சொல்ல சொல்லி குச்சியை தட்டிக் கேட்பது போல் இருந்தது.வெளியே வராந்தாவில் நின்று அந்தி சூரியனை ஏந்தும் வானத்தைப் பார்த்தார். இளம் சிவப்பு வானத்தின் பின்னணியில் பறவை ஒன்று படபடக்காது ஒய்யாரமாக சுற்றிக் கொண்டிருந்தது, இருக்கிற வேகத்திலேயே பெடல் செய்யாமல் சைக்கிளில் சுற்றி மகிழும் சிறுவனைப் போல..

அக்கணத்தில், துரத்தியே பழக்கப்பட்ட காலமும் மௌனமாகி நின்றது மோனத்தில்.


அமைதியை அள்ளி பருகிய நிச்சலனத்தில் கணிணி முன் வந்து அமர்ந்தார். தனக்கு மிக பிடித்தமான ,சுய ஆர்வத்தில் தயார் செய்கிற மானிடர் டூலின் வேலையில் மும்முரமாக இறங்கினார்,  அப்பளிகேஷனில் தற்போது இருக்கிற மானிடர் டூல் ,தேவையான தகவலை தேவையான நேரத்தில் தருவதில்லை . சரி ,இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றி ஆரம்பித்தது. நல்ல பொழுது போக்காக மாறி இருந்தது.மறுநாள் “களொடு” என்ற புது தொழில்நுட்ப பயிற்சியில் கலந்துக்க சொல்லி இருந்தார்கள். பெஞ்சில் இருப்பவர்கள ,ஒன்று பயிற்சியில் கலந்துக்கனும் ,இல்லை பயிற்சி தரணும் மற்றவர்களுக்கு. மேகம் என்பதறகான ஆங்கில சொல்லில் இப்போது கணிணி உலகத்தில் பிரபலமாகி வரும் ஒரு தொழில் நுட்பம். விளாவாரியாக  அத்தொழில்நுட்பத்தை பற்றி பேசினார் அதை நடத்துபவர்.

எதற்கு..எதற்காக.. எதற்கெல்லாம் என்று பேசினார் ஆனால்  ஒரு பிராஜகட் என்று போனால் இதையொட்டிய என்ன மாதிரியான வேலை இருக்கும்,அதை எப்படிச் செய்வது என்பதற்கு அவர் வருவதாய் இல்லை.


அருகில் அமர்ந்திருந்த திலீப் “என்னங்க சொல்றாரு?” என கொஞ்சம் நக்கலாக கேட்டார்.

”ஆங்.. களொடில் இறங்கி பிளானை தள்ளலாம்..ங்கிறாரு..”  என்றார் சபேசன்.

திலீப் தலை குனிந்தப்படி பலத்து சிரித்தார்.


தேநீர் இடைவெளியில் , நிதின்,அதூல் தென்பட்டார்கள் . ”ஹலோ அங்கிள் ” என்று ஆரம்பித்தான் அதூல். அங்கிளா ! என்று சபேசன் கேட்டடதும் சுதாரித்து ஏதோ சொல்ல வரும் போதே பின்னால் மிருதுளா வருவதை பார்த்து ,வயதானவர்களிடம் பேசிக் கொண்டிருந்தால் , தன் இமேஜ் அவள் முன்னால் பாதிக்கும் என்பதுப் போல சன்னமாக ஒதுங்கிப் போனான்.


சபேசன் தீலிப்பிடம் ”அவங்களாவது ..  சீனியர் ரிசோர்ஸ் ன்னு சொல்லி சொல்லியே,ஹார்பிக், டேட்டால் எல்லாம் ஊத்திக் கழுவி விட்டு அனுப்புவாங்க.. காலேஜ்லேயிருந்து பிரஷ்ராக வந்த இவனுங்க .. நம்மளை சீனியர் சிடிஷனாகவே ஆக்கிடுவானுங்க போல இருக்கே! அங்கிள்..ங்க்கறான்!”


”சரி விடுங்க ,சபேசன்” என்ற தீலிப்பிடம் பேசிக் கொண்டே மீண்டும் பயிற்சி அறைக்குள் நுழைந்தனர்.


இப்படியாக ஏதோ ஒரு வகையில் இரண்டு வாரம் கழிந்த பின்பு ,டெக் சிம்போசியம் ஒன்று நடப்பதாய் அறிவிப்பு வந்தது, சி,இ.ஓ முதல் முக்கியமானவர்கள் பங்கேற்பார்கள் என்று. தான் தயார் செய்த மானிடர் டூலை முன் வைக்கலாம் என முடிவுச் செய்து அதற்கான வரைவையையும் அமைத்து , அந்நாளன்று எல்லோர் முன்பு விவரித்தார்


எதிர்பார்த்தற்கு மேல் அளவுக்கு அதிகமான வரவேற்பு பெற்றது. இந்த டூலுக்கு பெடண்ட் எடுக்கலாம் என்கிற அளவுக்கு பேசினார்கள். சி,இ.ஓவின் பாராட்டு உரையில், சபேசன் பெயரை குறிப்பிட்டு ,இது தான் வால்யு ஆட் என்கிற , செய்கிற சேவையில் மதிப்பு சேர்ப்பது . சபேசனை முன்மாதிரியாக கொண்டு மற்றவர்களும் முக்கியமாக ஜுனியர்கள் , கம்பெனியை மேல் எடுத்து செல்ல வேண்டும் என்றுச் சொல்லி பரிசும் அளித்தார்.


அவ்வளவு தான்.. கூட்டம் முடிந்ததும் , அதுவரை பார்த்து பார்க்காமல் ஒதுங்கி போன பலரும் ,சபேசன் அருகில் வந்து ஏதோ ஒரு விதத்தில் ,தனக்கும் சபேசனுக்கும் தொடர்புண்டு எனக் காட்டிக் கொள்வதில் ஒரு சின்ன பெருமிதம் கொண்டார்கள். ஆரம்பிச்சது எப்போ ,ஏது என பல கேள்விகள் கேட்டார்கள் .. நாம் மறுபடியும் சந்திக்கனும் என்றார்கள் சிலர். எல்லாவற்றையும் விட  சபேசனை மிகவும் ஆச்சரியப்படுத்தியது, மிருதுளா முன் சன்னமாக ஒதுக்கிய அதூல் இப்போது தன்னோடு சேர்ந்து நின்று செல்பி எடுப்பதில் தன் இமேஜ் கூடும் என நம்பி அணுகியது.


சற்றும் நெருடல் இல்லாமல் ,சபேசன் அதூலின் தோளில் கை வைத்து செல்பி எடுத்துக் கொண்டார்.
இக்கூட்டத்தின் மத்தியில் ,சபேசனுக்கு தன் செய்கையே, அமைதியான தன் மனப்போக்கே ஆச்சரியத்தை அளித்தது.


மாறுகிற மனிதர்களை ,மாறச் சொல்லும் சூழ்நிலைகள மன்னிக்கிற ,மன்னிக்க முடிவதில் உண்மையிலேயே “நான் ஒரு    சீனியர் ரிசோர்ஸ்” என மனதுக்குள் சொல்லி புன்னகைத்தார்


– பல்லக்கு (புனைப்பெயர்)

http://puthu.thinnai.com/?p=35356

சிறுகதை: 'ஹாக் செய்யப்பட்ட சித்ரகுப்தன் கணக்கு!

  எம தர்ம ராஜனின் வாகனமான எருமையின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகள் திடீரென்று சிகப்பு வெளிச்சத்துடன்  எச்சரிக்கை  சமிக்கைச் செய்தது. அசவர வேலையாக  போய்க் கொண்டிருந்த எம தர்மன்  “என்ன !? யாரது ,என்னாயிற்று ” எனப் பதட்டமாக கேட்டார்.

அம்மணிகள் பேசவும், கேட்கவும் ,அவசர சமிக்கைச் செய்யவும் வடிவமைக்கப் பட்டிருந்தது.

மறுமுனையில் ,சித்ரகுப்தன் “தலைவா! நம் கணிணி நிலயத்தை எவரோ 'ஹாக்' செய்துவிட்டார்கள்! ”

“'ஹாக்' ..!? அப்படி என்றால் ? ,விவரமாக சொல்லுங்கள்” எனக் கேட்டார்

“எவரோ நம் கணிணியில் இருந்த சில கணக்கு பையில்களை களவாண்டு விட்டார்கள்!”

“அப்படியா! எந்த கணக்கு !!  ” என அதிர்ந்துக் கேட்டார்.

“பாவ புண்ணிய கணக்கு பையில் களவாடப்பட்டது. இந்தந்த செயலுக்கு இவ்வளவு புண்ணியம், பாவம் என அளவு கணக்கு இருந்தது அல்லவா!? அது..”

“ஓ..ஓ !! அது முக்கியமான கணக்கு ஆயிற்றே ! அதை கொண்டு தானே  ஒவ்வொரு மானிடருக்குமான  மொத்த கணக்கு ரிப்போர்ட் ,மும்மூர்த்திகளுக்கும் நாம் அனுப்புகிறோம். இதை திரும்பப் பெற வழி இருக்கிறதா என கணிணி துறையினரிடம் கேட்டீர்களா?”

“நம் கணிணி துறை ,அசட்டு நம்பிக்கையில் அதற்கு 'பேக்-அப்' எடுக்கவில்லையாம் ..ஆகையால் 'ரி-கவர்' செய்ய முடியாது எனச் சொல்லி விட்டார்கள் !”

“சரி , அப்படியானால் இதை மூம்மூர்த்திகளுக்கும் உடனே தெரியப் படுத்துங்கள் ,சித்ரகுப்தன்..”

உடனே மூம்மூர்த்திகளோடு அசவர கூட்டம் கூட்டப்பட்டது.

மூம்மூர்த்திகளில், பிரம்ம தேவன் மிகவும் அதிகம் துணுக்குற்று “எதைக் கொண்டு அவர்கள் தலை எழுத்தை எழுத, நான். !! ” என வருத்தபட்டார்.

“சரி அந்த கணக்கு பதிவில் என்னதான் இருந்தது ? ” எனக் கேட்டார் விஷ்ணு.

“உதாரணத்துக்கு ..புண்ணியம் எனக் கொண்டால் ,  தெய்வ இருப்பிடம் எனக் கொள்கிற அமைப்புகளுக்கு நன்கொடை செய்வது ,  பிறந்த நாள் எனில் அனாதை ஆசிரமங்களுக்கு தலைக் காட்டுவது. குறிப்பிட்ட தினத்தன்று குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ,குறிப்பிட்ட பொருளை வைத்துக் கொடுப்பது,  உங்கள் பெயர்களில் ஏதோ ஒரு பெயரை மட்டும் கொண்டு வழிப்பட்டால்  ,அவர்களுக்கு கல்வியில் சலுகைச் செய்வது ..  ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட புண்ணிய பலன்கள்  ... இப்படி பல அளவீட்டுக் கணக்குகள் அதில் இருந்தது ” என்று விளக்கம் சொன்னார் சித்ரகுப்தன்.

'ஹும்'.. என்றனர் கேட்டவர்கள்.

இப்போது இதைச் சொன்னால் தான் உண்டு ..என்பதுப் போல நாரதர் , லேசாக தம்பூராவை மீட்டியப் படியே.. “இதற்கு கொடுமையான பக்கவிளைவுகளும் இருக்கிறது. உங்களுக்கு படைக்க வைத்திருந்த  இனிப்பை, சிறு குழந்தை ,படைப்பதற்கு முன்பே எடுக்கப் போனால் பட்டென்று கையிலும் வாயிலும் அடிப்பதிலிருந்து ஆரம்பித்து உங்கள் பெயரில் ஏதோ ஒரு பெயரை இழிவுப் படுத்தியதாக புரளி வந்தாலும், கொலை செய்கிற வரை .. பல கொடுமைகள் .பாவ புண்ணிய  நம்பிக்கையை ஒட்டி  நடந்துக் கொண்டுத் தான் இருக்கிறது....” என்று இழுத்தார்.

“என்னது... !” என சிவபெருமான் இதைக் கேட்டதும் கோபமாக அதிர்ந்துக் கேட்டார்

அந்த அதிர்வில், அவர் கையில் சுற்றியிருந்த சின்ன  பாம்பு ஒன்று துள்ளி கீழே விழுந்தது . பயந்து திரும்பி பார்த்தது.. அதைக் கண்டு சிவபெருமான் “நான் உன்னை சொல்லவில்லை ..நீ வந்து ஏறிக் கொள் ” என்றதும் செல்லமாக, மறுபடியும் வந்து சிவபெருமானின்  காலில்  சுற்றிக் கொண்டது.

“தெய்வ நம்பிக்கைகளின் பெயரில் ஆரம்பித்த இக்கணக்கு ,இப்போது பல மாறான ,அபத்தமான ஆபத்துகளை உருவாக்குமானால் ,இக்கணக்கை நாம் மறு பரீசீலனை செய்ய வேண்டும் ” என்றார் சிவபெருமான்

“இதற்கு எல்லாம் காரணம் என்ன ? .. எல்லாவற்றையும் சேர்த்தே பழகிய மனிதர்கள் புண்ணியங்களையும்  சேர்ப்பதில் மும்முரமாகி, இதைச் செய்தால் புண்ணியம் ,அதைச் செய்தால் புண்ணியம் என கிளம்பி விட்டார்கள் ..அடிப்படையான அன்பை அனுபவிப்பதில் கவனம் தவறி விட்டது.  அவர்கள் அன்பை பரிபூரணமாக உணர வேண்டும். அதை மீண்டும் இவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதற்கு  இந்த கணக்கு தொலைந்தது தொலைந்ததாக இருக்கட்டும்.” என்றார் விஷ்ணு.

“அப்படியானால் .. அதை பூமிக்கு சென்று மனிதர்களுக்கு புரிய வைக்க,  மறுபடியும் நீங்கள்  அவதாரம் எடுக்க வேண்டியிருக்குமோ ! ” எனக் கேட்டார் நாரதர்.

“என் கால கணக்குப் படி மானிடர்கள் முன் விடலைப் பருவத்தில் இருக்கிறார்கள் . எதைச் சொன்னாலும் தப்பாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. நாம்  பார்த்துப் புரிய வைக்க முயற்சி பண்ணுவோம்.”  என்று யோசிக்கலானார் விஷ்ணு.

அவரே தொடர்ந்தார்.. “அப்படியே அவதாரம் எடுத்து போயோ ,தெய்வ தூதுவனாக அனுப்பியோ சொன்னாலும் மீண்டும் அதை வைத்துக் கொண்டு வேறு ஒரு பஞ்சாய்த்து பண்ணுவார்களே! அந்த இம்சை இருக்கிறதே...”

“ஓ! 'ப்ரீ-டீன் ஏஜ் பிராப்ளம்' என்கிறீர்களா.. ” எனக் கேட்டார் நாரதர்.

விஷ்ணுவிற்கு ஏதோ ஒன்று பிடிப்பட்டதுப் போல, “சரி , என்னச் சொன்னீர்கள் !...கணினியை 'ஹாக்' செய்து விட்டார்கள் என்றுத் தானே.. பூமியிலும் ,மனிதர்கள் கணினி இணையங்கள் வைத்திருப்பார்கள் அல்லவா? 'ஹாக்' செய்யும் போது ,நாம்   கணிணி நிலயத்தை வசப்படுத்தி நமக்கு தேவையானவற்றை யாருக்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும் அல்லவா?  ” எனக் கேட்டார் 

“ஆமாம் , செய்யலாம் ! ” என்றனர் தேவ லோகத்து கணிணி துறையினர்.

“அப்படியானால் நான் எழுதித் தருகிற செய்தியை,பூமியின் எல்லா  கணிணி நிலையங்களுக்கும் சுவர் செய்தியாக வரும் படியாக செய்யுங்கள்.”


`கடவுளாகிய நான் , பாவ புண்ணிய அளவு கணக்கீட்டில் ஒரு மாற்றத்தை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். எவ்வாறு சூட்டை உணரவும், குளிரை உணரவும் இன்னோரு மன கணக்கு தேவையில்லையோ..தொடுகிறீர்கள் உணருகிறீர்கள். அவ்வளவே... அதே போல் மற்றவர் துன்பத்தை பார்க்கிறீர்கள் .. உணர்வீர்கள். அதற்கேற்ப செயல் படுவீர்கள். எதைச் செய்தால் புண்ணியம் என கணக்கு வைத்து, அன்பை முழுமையாக உணரும் வாய்ப்பை இழந்து விட்டீர்கள். பாவ புண்ணிய அளவு கணக்கு என ஒன்று இருப்பதாக நீங்கள் கொள்வதினாலேயே ,உங்களுக்குள்  தன்னிச்சையாக இரக்கம் ஏற்படுவதை சரியாக உணரும் முன்பே, மனம் இக்கணக்கு பக்கம் திரும்பி திசை திருப்பி விட்டு இருக்கிறது.  இக்கணக்கின் இடையுறு இல்லாமல் , யார்  வாஞ்சையை மனதில் உணருகிறார்களோ, , அவர்களுக்கு அது மறுபடியும்  தொலைந்து போகவே முடியாது

எனவே, என் பெயரைச் சொல்லியோ ,எனக்குச் செய்வதாக நினைத்தோ, நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்கிற  அளவீட்டுக்காக மட்டும் செய்கிற  செயல்கள் புண்ணிய கணக்கில் வராது. பயப்பட வேண்டாம். எல்லோரையும் அன்பின் ஊற்றோடு தான் அமைத்தோம்.  வாஞ்சையின் ஊற்றை உணர்ந்தவர்கள் , உணராதவர்கள் என்ற பிரிவு மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். இந்த மாற்றம் ,இந்த அறிவிப்பை நீங்கள் அறிந்ததிலிருந்து அமலுக்கு வருகிறது.

வழக்கம் போல் ஆசீர்வதிக்கிறேன் ! ’  

-  பூமியிலுள்ள எல்லா பிரதான வலை தளங்களிலும் , மேற்கண்ட  அறிவிப்பு ,சுவர் செய்தியாக   அனைவரின் கணிணியிலும் பளீரென்று காட்சியிடப்பட்டது.


– பல்லக்கு (புனைப்பெயர்)


சிறுகதை: 'ஹாக் செய்யப்பட்ட  சித்ரகுப்தன் கணக்கு!
கதைகள் - பதிவுகள் பத்திரிக்கையில், http://pathivugal.com/
Friday, 18 August 2017 20:01 வெளிவந்தது.

Sunday, January 28, 2018

பாதை

பாதை என
தனியாக ஒன்று
எங்குமில்லை..


என் ஒவ்வொரு காலடிக்கும்
முன்பு கைப்பிடி கருங்கற்களை
நானே நிரப்பியப்படி செல்கிறேன்


இதற்கு
வெறும் தரையிலேயே
நடந்து விடலாம் தான் ..


நடக்கின்ற தைரியம் முளைப்பதே
பாதையென கொள்வதில் என்பதனால்
கற்களை பாதையாக்கிய பயணம்


தடம் பதித்து தெரிவிக்கவோ
கம்பள வரவேப்பு ஏற்கவோ அல்ல.
பாதை போட்டு திரிந்தாலாவது
அடைகிற இடம் புலப்படலாம்..


அருகிலிருப்பவரின் பாதைகள்
அக்கரைகளாக அச்சுறுத்துவதில்
இடைவெளி வெறுந்தரைகள்
ஆறாக அரற்றுகிறது


நான் வீசிய ஒவ்வொரு
அங்குல பாதைகள் மட்டுமே
கதை பேசி அழைத்து செல்கிறது
நடு ஆற்றில் விழுந்து விடமாட்டாயென
கைப் பிடித்து..


நீங்கள் கிளம்பலாம்

ஆரிகாமி உருவம் ஒன்றுக்கு
காகிதத்தை பகுதியாக மடிப்பதும்
நீண்ட பகுதியை குறுக்குவதும்
கலைத்து பின் சரி செய்வதுமாய்..


மனதையும் மடித்து மடித்து
சீர்பண்பு ஒன்றுக்கு பழகுகிறேன்


திண்மை உருப் பெற
முன்மடிப்பில் எளிமையை மடக்குகிறேன்
வன்மை துருத்தியப்படி பின்மடிப்பில்


சுய அங்கீகாரம் உருவேற்ற
முடியுமென்ற பகுதியின் பக்கவாட்டில்
முடியாது பகுதியை  நீட்டுகிறேன்


அதுவரை என்னுடனிருந்த நீங்கள்
அரங்கத்தில் இருந்து இறங்கி
பார்வையாளர் இருக்கையில்
நேர் எதிரில்.


ஒவ்வொரு மடிப்பையும்
தனித்தனியாக அவதானிக்கிறீர்கள்
பின்மடிப்பில் வன்மம் தெரிகிறது
பக்கவாட்டில் அகம்பாவம் தெரிகிறது
தொடர்ந்து கூச்சலிடுகிறீர்கள்
மன்னிப்பு கோருகிறீர்கள்


உருவம் ஏற்றவே மடிப்புகள் என்றோ
துருத்திய பகுதியை மடிப்பேன் என்றோ
முழு உருவத்திற்கும் காத்திருக்கும் அன்பையோ
அறிந்திராத, அறிய முயலாத உங்களை


பார்வையாளராக கூட
இருக்க வைத்து துன்புறுத்த
விரும்பவில்லை ஆகையால்…


நீங்கள் கிளம்பலாம்
நன்றி!

http://www.keetru.com