Wednesday, August 31, 2011

எப்படி.. இப்படி..

தானுண்டு, தன்வேலையுண்டு..
நேர்த்தியாக சுயநல வரைகோடை
வரைய தெரிந்த வகையறாக்கள்..

குருதி பாயும் இனவெறி கொடூரங்களை
வெறும் செய்தியாக மட்டும்
தேநீர் இடைவெளிகளில்
சப்பு கொட்டியபடி ..

எப்படி முடிகிறது இவர்களால்..
உணர்வுக்கும் உணர்தலுக்கும்
இடையேயான இரத்தம் பாயும்
நரம்பு ஏதும் அறுபட்டிருக்குமோ?

உதாசீன மனத்தின் மையக்கருவில்
இடியென இறங்கும் சுயநிகழ்வுகளில்
சூம்பிக் கிடக்கும் நாளங்கள்
உயிர் பெறுமோ, உள்வாங்குமோ ...

நன்றி : கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16374:2011-08-30-04-41-32&catid=2:poems&Itemid=265

Monday, August 15, 2011

பிரசவ அறை

நீ பிறந்து விட்டாய்
கேட்டதும் சில்லென்ற உணர்வு..

உன் அம்மாவுக்கும் எனக்கும் இடையே
அரை அங்குல புன்சிரிப்பு மட்டும்
கடைதெருக்களில் தென்படுகிற வேளைகளில் – எனினும்
பிறப்பே, பிறப்பை பார்க்க வருவதே பரவசமாய்..

எப்போது என தெரியாமல்
வெடிக்கின்றன குண்டுகள்..
முதுகில் பாய்கின்றன பாதுகாவல்கள்…
உறவுகள் தருவதற்கு மறுதலிக்கிறது -
தலையனை தரும் ஆறுதலை கூட
சிற் சமயங்களில் ..

என்ற போதும்
ஏதோ ஒர் மூலையில்
மிக அகண்டு,மிக அகண்டு -
வாழ்க்கையின் மீதுள்ள நம்பிக்கை
முத்தமிடுகிறது உன் நெற்றியில்

பூவுலகத்திற்கு ,எங்கள் உலகத்திற்கு
வந்து விட்டாய்,அந்த ஆனந்தத்தில்
வரவேற்கிறேன் ,அன்பே உன்னை !

நன்றி : திண்ணை
http://puthu.thinnai.com/?p=3290

Friday, August 12, 2011

மன்னிப்பு

நான்கு எண்ணி உள்மூச்சும்
மூன்று எண்ணி வெளிமூச்சும்
யோகா செய்தாகி விட்டது
உலரவில்லை ரணம்

வருடுகிற இசையும், வண்ணமிகு புகைப்படங்களுடன்
யூ-டியுப்பில் 'அமைதி' குறியீட்டு
இசை தொகுப்புகள் யாவும்
கேட்டும் பார்த்தாகி விட்டது ..

ஆத்மாக்களில் பேதமில்லை
நல்லது கெட்டதென தனித்தில்லை -
கேட்கிற வரை ஒப்புதலாயிருந்தது
வடுக்களை கீறுகிற நிகழ்வுகளில்
விண்ணென தெறிக்கிறது மீண்டும்..

கர்ம வினையாகி துரத்தாமல் இருக்க
மன்னிக்க வேண்டுமாம் வஞ்சித்தவர்களையே!!
சிலுவையிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகும்
சிலுவையை சுமக்க சொல்வதென்ன..

புரிதலில் வருகிற மன்னிப்பை
விடாமல் பிடிக்கத் துரத்துவதில்
மண்டி கருகுகின்றன நொடிகள்

நன்றி:கீற்று

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15957&Itemid=139

Thursday, August 11, 2011

சம்பாஷனை

ஓங்கிய பொருளில், பேச்சில்
என்னை கீழே இறக்குவதும்,
அதையே நானும் செய்ய
நீ கீழே இறங்குவதுமாய்
அவரவர் பிடியை பிடித்தபடி
ஆடும் சீ-சா விளையாட்டா ? - சம்பாஷனை !


இயைந்த சொல்லில்,நயத்தில்
ஆமோதித்து கோல் தட்டி
இடிபடாத, பிடிபடாத ,லயித்த
சுய அபிப்பராய அசைவுகளுமான
குதுகூல கோலாட்டம் தானே ! சம்பாஷனை ?


நீயே சொல்லேன் !
யோசித்தாவது.......

நன்றி:பதிவுகள் (ஆகஸ்ட் கவிதைகள்)
http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=332:2011-08-10-03-17-34&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23