Sunday, September 18, 2011

காரணமில்லா கடிவாளங்கள்

பெரு வட்டம்
அதனுள் சிறுவட்டம்
மீண்டும் உள்வட்டம்
கருவட்டம் மையபுள்ளியாய்
குறிபலகை ஒன்று..

மைதானத்தில் எவனோ நட்டுவிட்டான்
வருவோர் போவோர் எல்லாம்
மையத்தை நோக்கி எய்த
ஆரம்பித்து விட்டனர் அம்பை..

பலகை வரை கூட செல்லாத ,
பெருவட்ட வளைவில் செருகிய ,
வட்டத்தை தொட்டு கவிழ்ந்த .- என
சிதறியது பலதரப்பட்ட அம்புகள்
தோல்வியென சுருங்கியது மனங்கள்

குறிபலகை இருக்கிறது என்பதற்காக
குறி எய்த வேண்டுமென
எவர் சொன்னது ?

கல்யாணம், குழந்தை, குட்டி
சம்பாத்யம்,பணம்,காசு
இதுதான் வாழ்க்கை என்றும்
எவர் சொன்னது ?

நன்றி : திண்ணை
http://puthu.thinnai.com/?p=4287

இலைகள் இல்லா தரை

உதிர்ந்த இலைகள்
ஓர் நவீன ஓவியம் ....
‘உயிரின் உறக்கம்’ -
என்ற தலைப்பில்

இலைகள் அள்ளபட்ட தரை -
சுவற்றில் ஓரம் சாய்க்க பட்ட
வெற்று ஓவிய பலகை

மற்றொமொரு
நவீன ஓவியம்
உதிரும் வரை

நன்றி : திண்ணை
http://puthu.thinnai.com/?p=4144

Friday, September 9, 2011

கூடியிருந்தோ குளிர்ந்தேலோ..

சூழ்ந்திருந்த மாமரமும்
சிறகடிக்கும் பட்டாம்பூச்சியும்
ரீங்காரமிடும் தட்டான்பூச்சியும்
மத்தியிலிருந்த நானும் – ஆளுக்கொரு
கை உண்டு குளிர்ந்தோம்
இடை-வெளியிலிருந்த நிச்சலனத்தை ..

நன்றி : திண்ணை
http://puthu.thinnai.com/?p=3480

அழகியல் தொலைத்த நகரங்கள்

தென்னைமர உச்சி கிளைகள்,
அடர்த்தியான வெண் மேகம்
நீல வான பின்னணியில் ..
இயற்கை ஓவியத்தின் கீழ் குறுக்கில்
கிறுக்கல் கோடுகள் -
கோணல் மாணலாய் தொங்கும்
கேபிள் டிவி கம்பிவடங்கள்..

சாலை அமைக்கவே ஒரு துறையும்
கொத்தி குதறவே மற்ற துறைகளும்
வீட்டு ஜன்னலிருந்து கைநீட்டினால்
சாலை தரை தட்டும் – மேன்மேலும்
உயர்ந்து விட்ட சாலை-சீரமைப்புகளும்!!
அவரவர்களுக்கு உண்டான காரணங்களோடு ..

காற்றிலும் , அதிராத அளவான
ஒயிலாக கிளையிலை அசைக்கிற
அழகியல் அறிந்த மரங்களுக்கு
மூன்றாம் தர ஜிகினா தொங்கல்கள்
கண்ணை எரிக்கும் பளீர் நிற
குட்டி மின்குமிழ் விளக்குகள்
விசேஷ வரவேற்பு காலங்களில்!

நன்றி : திண்ணை
http://puthu.thinnai.com/?p=3717

நிலா மற்றும் ...

மழை சேமிப்பு திட்டம்..
மொட்டை மாடியில்
பொழிந்த மழைக்கென..

நிலா சேமிப்பு உண்டா ?
மொட்டை மாடியில்
பொழிந்த நிலவுக்கென ..

அவசரகதி தட்டுபடாத
பிறிதோரு நேரங்களில்
ஒன்று கூடி நாங்கள்
நிலா சோறு உண்ண..

மின்-விளக்கு
காய்ச்சலில் கழிகிறது
எங்கள் முன்இரவுகளும் பகல்களும்
அவரவர் அறைகளில்..

சேமிக்க தெரியவில்லை
நிலா மற்றும்
இன்ன பிற ..

நன்றி : திண்ணை
http://puthu.thinnai.com/?p=3955

நேய சுவடுகள்

நேயத்திற்கு
மொழி உண்டா,
எழுத்து வடிவத்துடன் !!

சகதியில் சிக்கிய
பசுவின் அலறலும்,
காப்பாற்றுகிற கைகளினால்
சகதி துமிகளின் ‘தப்...திப்பு’ களின்
பரிபாஷனையும் உருகொடுத்தது நேயமொழியாக..

கை கொடுக்காத
அச்சச்சோக்களும் அய்யையோக்களும்
ஓலங்களாயின ,மொழிகளாய் அல்ல..

காகிதத்தில் கை சகதியை துடைத்தபடி
சென்ற வழிபோக்கனின்
கால்சுவடும்..
அதை ஒட்டியபடி நெடுக
தொடர்ந்த பசுவின்
கால்சுவடும்..

நேய மொழிக்கான
எழுத்து வரிசை வடிவமாய்
அரங்கேறியது சகதி படிமத்தில்..

நன்றி : காற்றுவெளி (செம்படம்பர் 2011 இதழ்) 79 பக்கம்
http://kaatruveli-ithazh.blogspot.com/