Monday, July 17, 2017

தேடாத தருணங்களில்

கூழாங் கற்களை
தேடிப் பழகிய கைகள்
வெறுங்கையாகவே
குவிந்து மூடிக்கொண்டன
ஒர் தீர்மானத்துடன்..

தேடுவதை ஏன்
நிறுத்திவிட்டாய் என
மெல்ல தட்டிக் கேட்கிறேன்
விரல்களை இதழ்களாக
விரித்துக் காண்ப்பிக்கிறது

தேடாத தருணங்களில்
மட்டுமே உருவாகும் சுயமான
ஒளிக் கற்களை

நன்றி: திண்ணை
http://puthu.thinnai.com/?p=35005

Monday, October 13, 2014

சாப விமோசனம்

சீதைகளின் சாம்பலில்
அடித்துச் சொல்கிறேன்
கல்லாய் போவென்ற சாபத்திற்கு
இராமர்களின்
பாதங்கள் பொருந்தவில்லை


என்னை சமட்டியால் அடித்து
சமன் செய்து கொள்ளப் போவதுமில்லை
கல்லுக்குள் ஈரமென்று இரண்டொரு
இலைகளை மட்டும் துளிர்க்க விடுவதுமில்லை


ஏனெனில் நான் கல்லாய்
ஆனதுமில்லை, இயலவும் இல்லை.
பின்முதுகு தாக்குதலினால்
ஏளனப் பார்வைகளினால்
அடக்கும் கைகளினால் - என்னை
சுற்றி அப்பிக் கொண்டது
கருங்காரைகள் பக்கு பக்குகளாக..


மொத்தத்தில் இவை யாவும்
சம்பவமே, சாத்தியமே என
தெளிவு முளை விட்டது
இக்கருங்காரை கருவறையில்.
என் கைப்பட காரைகளை
அகற்றி பிறந்து வருவேன்
கையாளும் திறனோடும்
கூர் சீவிய கருணையோடும்
இன்னும் சில காலத்திற்குள்..

நன்றி - கீற்று
http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/27204-2014-10-13-01-22-14

Monday, June 3, 2013

இடமாற்றம்

கண்களுக்கு எதிரே
விரல்களுக்கு இடையே
நழுவுகிறது தருணங்கள்


இந்நாட்டு மக்களின்
மெல்லிய சிரிப்பை
அதிராத பேச்சுக்களை
கலைந்திராத தெருக்களை
நேர்த்தியான தோட்டங்களை


வாரிச் சுருட்டி
வெண் கம்பளத்தில் அடுக்கி
அணைத்தபடி உடன் கொணர நேர்ந்தால்
கை நழுவுகிற தருணங்களைப் பிடித்து விடலாம்


நேசித்தவைகளை அங்கங்கே விட்டுவிட
சொல்கிற ஒவ்வொரு இடமாற்றமும்
வாழ்விலிருந்து விடுபடுகையில் , மரணத்தை
நளினத்துடன் தழுவப் பயிற்றுவிக்கும் ஒத்திகைகள்……


நன்றி: திண்ணை

Thursday, March 7, 2013

மார்கழி கோலம்

முகத்தை வருடிய தென்றல்
வண்ண வண்ண இளநிறங்கள் ஏற்று
சின்னஞ்சிறு இருதய வடிவங்களில் அமர்ந்தது
மேசையில் கிடந்த குறிப்பேட்டின் அட்டையில் ..


கைபேசி,கணினி,மடிகணினியின்
மின்னூட்ட கயிறுகள் நெரிக்கும் மேசைக்கு -
உயிர் தெளித்து மார்கழி கோலம் …

நன்றி: திண்ணை
http://puthu.thinnai.com/?p=18884#comment-14211


Thursday, January 31, 2013

ஆட்டகளம்


கடவுள் தோளில் சுமந்து வந்து
இங்கே விளையாடி விட்டு வா
என்று ஆசி கூறி மறைந்தார்

விளையாட்டு விதிகள் அச்சடிப்பு :

"இருப்பதை கெட்டியாக பிடித்துக் கொள் - என்றாலும்
இருக்கிற எதற்கும் மதிப்பு இருக்காது
இல்லாத ஒவ்வொன்றுக்கும் அவமதிப்பு தப்பாது"

விதிபடி விளையாட ஆரம்பித்தேன்
ஆட்டம் நிற்பதாகவும் தெரியவில்லை
சிலநேரங்களில் விளையாடவும் தெரியவில்லை

முதல் ஆட்டத்தின் அம்பு வேட்டையரிடம்
தற்போதைய ஆட்டத்தில் எல்லோரிடத்திலும்
தப்பித்து தாண்டினால் புள்ளிகள் கூடும்

சொரிந்து சொரிந்து காட்ட வேண்டியதாகியது
குரங்கு தான் என்று நிரூபிக்க - இல்லையெனில்
நான் வெளியேற்றப்படக் கூடும்

ஆதிகால வேட்டை விளையாட்டின் நெடி
தலையணை உறையிலும் கசிந்தது
ஆழ்ந்து உறங்கலாம் என்றாலும்

சும்மா இருந்த என்னை
இங்கே இறக்கிவிட்டுச் சென்று விட்டவரை
கடவுள் என்று எப்படி சொல்கிறேன்?


நன்றி : கீற்று (31-Jan-2013)
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=22815&Itemid=139

Monday, January 28, 2013

கவிதை பக்கம்

கவிதை பக்கம்
காலியாக சிலகாலம்
கவிதையான நிகழ்வுகளும்
குறைவான காலம்


திடீரென பள்ளிகூட அலுமினி கூட்டம் -
பழைய சினேகிதிகள் ஒவ்வொருவராய்
பேச்புக்கில் கண்டுபிடிப்பு - சபை நிறைந்தது
பேச்புக் கூட்ட பக்க உரையாடல்
பள்ளிகூட வராந்தாவாக சலசலப்பு


பலவருடத்திற்கு பிறகு புகைபடத்தில்,
அவளா இவள் ? இவளா அவள் ?
ஆறுவித்தியாச துணுக்காக
நினைவுகளும்,நிஜங்களும்..


சிரிக்க வைத்தவள்,சீண்டியவள்
சிணுங்கியவள்,கலகலத்தவள் -
ம்றுபடியும் பார்க்கையில்,
தீக்குச்சி நெருப்பென சீண்டப்பட்ட
நிகழ்வுகளும் மறைந்து போனது


காலை முதல் மாலை வரை
வாழ்க்கை முழுவதற்கும் சேர்த்து
சிரித்தது போல் சிரித்தது...
பாட நேரத்தில் ஆசிரியர் அசைவுகளை
கவனமாக கவனித்து - மதியஉணவுடன்
சேர்த்து அரைத்து சிரித்தது...


நினைவுகள் யாவும்
பள்ளி வராந்தா  ஒலியாக
உடம்பு முழுதும் பரவியது..
இக்குதுகூலம் கவிதை இல்லையெனில்
வேறு எது கவிதையாக கூடும்?

- சித்ரா
(k_chithra@yahoo.com)

நன்றி : திண்ணை (28-Jan-2013)
http://puthu.thinnai.com/?p=18076

Sunday, May 20, 2012

இந்நிமிடம் ..


இந்நிமிட குப்பிக்குள்
பழைய நினைவுகளை
புதிய நினைவுகளை
திணிக்க திணிக்க
திமிறி ஓடுகிறது அமைதி..


இந்நிமிட கொள் அளவில்
வைக்க வேண்டியதை மட்டும்
வைத்து எடுக்க எடுக்க -இந்நிமிடம்
அடுத்த ,அதற்கடுத்த நிமிடம் ..


மாற்று நிறங்களின் தறி பாவில்
ஊடு நூலாக - வளைந்து புகுந்து
அமைதியை நெய்ந்து தருகிறது
இந்நிமிடங்கள்...

நன்றி : திண்ணை