Sunday, January 28, 2018

நீங்கள் கிளம்பலாம்

ஆரிகாமி உருவம் ஒன்றுக்கு
காகிதத்தை பகுதியாக மடிப்பதும்
நீண்ட பகுதியை குறுக்குவதும்
கலைத்து பின் சரி செய்வதுமாய்..


மனதையும் மடித்து மடித்து
சீர்பண்பு ஒன்றுக்கு பழகுகிறேன்


திண்மை உருப் பெற
முன்மடிப்பில் எளிமையை மடக்குகிறேன்
வன்மை துருத்தியப்படி பின்மடிப்பில்


சுய அங்கீகாரம் உருவேற்ற
முடியுமென்ற பகுதியின் பக்கவாட்டில்
முடியாது பகுதியை  நீட்டுகிறேன்


அதுவரை என்னுடனிருந்த நீங்கள்
அரங்கத்தில் இருந்து இறங்கி
பார்வையாளர் இருக்கையில்
நேர் எதிரில்.


ஒவ்வொரு மடிப்பையும்
தனித்தனியாக அவதானிக்கிறீர்கள்
பின்மடிப்பில் வன்மம் தெரிகிறது
பக்கவாட்டில் அகம்பாவம் தெரிகிறது
தொடர்ந்து கூச்சலிடுகிறீர்கள்
மன்னிப்பு கோருகிறீர்கள்


உருவம் ஏற்றவே மடிப்புகள் என்றோ
துருத்திய பகுதியை மடிப்பேன் என்றோ
முழு உருவத்திற்கும் காத்திருக்கும் அன்பையோ
அறிந்திராத, அறிய முயலாத உங்களை


பார்வையாளராக கூட
இருக்க வைத்து துன்புறுத்த
விரும்பவில்லை ஆகையால்…


நீங்கள் கிளம்பலாம்
நன்றி!

http://www.keetru.com

1 comment:

  1. oh my God! This is a great poem. This reminds me of Teddy Roosevelt, man in the arena speech.

    ReplyDelete