Monday, October 13, 2014

சாப விமோசனம்

சீதைகளின் சாம்பலில்
அடித்துச் சொல்கிறேன்
கல்லாய் போவென்ற சாபத்திற்கு
இராமர்களின்
பாதங்கள் பொருந்தவில்லை


என்னை சமட்டியால் அடித்து
சமன் செய்து கொள்ளப் போவதுமில்லை
கல்லுக்குள் ஈரமென்று இரண்டொரு
இலைகளை மட்டும் துளிர்க்க விடுவதுமில்லை


ஏனெனில் நான் கல்லாய்
ஆனதுமில்லை, இயலவும் இல்லை.
பின்முதுகு தாக்குதலினால்
ஏளனப் பார்வைகளினால்
அடக்கும் கைகளினால் - என்னை
சுற்றி அப்பிக் கொண்டது
கருங்காரைகள் பக்கு பக்குகளாக..


மொத்தத்தில் இவை யாவும்
சம்பவமே, சாத்தியமே என
தெளிவு முளை விட்டது
இக்கருங்காரை கருவறையில்.
என் கைப்பட காரைகளை
அகற்றி பிறந்து வருவேன்
கையாளும் திறனோடும்
கூர் சீவிய கருணையோடும்
இன்னும் சில காலத்திற்குள்..

நன்றி - கீற்று
http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/27204-2014-10-13-01-22-14

No comments:

Post a Comment